முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் - இந்திய அரசு தகவல் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் சார்பிலும் 8000இற்கும் அதிகமான கருணை மனுக்கள் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை நிறுத்துமாறு கோரியே 8000 இற்கும் அதிகமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் உள்ள 801 அரசியல் கைதிகளின் சார்பிலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனிதஉரிமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஸ்ணய்யர், சமூக சேவையாளர் பாபா அம்தே, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹொஸ்பெற் சுரேஸ், உச்சநீதிமன்ற சட்டவாளர் இந்திரா ஜெய்சிங், அகாலி தள் தலைவர் சிம்ரஞ்ஜித்சிங் மான், கட்டடக்கலைஞர் லோறி பாக்கர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பஹுதீன், கேலிச்சித்திர வரைஞர் அபு ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் இந்தக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர்.தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சட்டவாளர் மயில்சாமி உள்துறை அமைச்சிடம் விளக்கம் கோரியதன் அடிப்படையிலே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment