தென் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் 1920 ஏப்ரல் 3:
ரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டம், நெருக்கடிச்சட்டம் எனப்பல பெயர்களால் அழைக்கப்பட்ட "குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911"
அடிமை விலங்கொடிந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தழும்புகள் அழியாமல் தங்கிவிட்டன.எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருத்த பிரிட்டிஷ்காரன், குறிப்பிட்ட சில இனங்களை பங்கப்படுத்தி அழிக்க நினைத்தான்.அந்த பிரிவினரால் மட்டுமே வெள்ளையன் மீதான கோபத்தை இன்றும் விட்டொழிக்க இயலவில்லை.
களவை தடுக்க வந்ததே "குற்றப்பரம்பரைச் சட்டம்" என மேலோட்டமாக சொல்லப் படுவதுண்டு. அது சுத்தபொய். பிரிட்டிஷ் நிருவாகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தவர்களில் அடக்க முடியாத, நெஞ்சுரமிக்க இனக் குழுக்களை இழிவு படுத்த ஒழிக்க வந்த கொடுஞ்சட்டம் இது.
பிரெஞ்சுப்புரட்சி உருவாக்கிய மக்கள் எழுச்சியை கூர்ந்து கணித்தது வெள்ளை ஏகாதிபத்தியம். காலனி நாடுகளில் தன் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் போராட்டக்குழுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல் ஏதும் இல்லை. தடியடி, கைது, பேச்சுவார்தை, உடன்படிக்கையை எட்டுவதும் கிழித்தெறிவதுமாக நாட்களை போக்கிவிடலாம். ஆபத்தில்லை. ஆனால் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட இனக்குழுக்களே ஆதிபத்திய அடித்தளத்தை மூர்க்கமாய் மோதி தகர்க்கும் வல்லமை மிக்கவர்கள் என்கிற வரலாற்றுபாடம் அவர்களை பயமுறுத்தியது.
இந்தியா முழுக்க 200 சாதியினர் பட்டியலிடப்பட்டு 'பிறவிக் குற்றவாளிகள்' என அந்நியனால் அடையாளப்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது இச்சட்டம் பாய்ந்தது.1911 இல் பல திருத்தங்களோடு புதிய வடிவம் கண்ட சட்டம், கள்ளர், மறவர், அகமுடையார், படையாச்சி, குறவர், தொம்பர், என எண்ணிக்கையை சுருக்கி இறுக்கியது. இந்த இனக்குழுவினரே அந்நிய ஆட்சிக்கு முந்தைய போர்ப்படைகளில் பெரும் பங்காற்றியவர்கள்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து எந்த தேசியவாதியும் வாய் திறந்ததாக பதிவுகளே இல்லை."கைரேகை வைக்காதே.கட்டை விரலை வெட்டி ஏறி " என பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மட்டும் முழக்கமிட்டார். தோழர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி போன்ற பொதுவுடைமைவாதிகள் ஆதரவு குரல் கொடுத்தனர்,
தேச விடுதலைப்போர் உச்சதில் இருந்த நேரம். ரௌலட் சட்டத்தை எதிர்த்து திரண்டதால் 1919 இல் ஜாலியன்வாலாபாக் கொடூரம் அரசியல் படுகொலையாய் வரலாற்றில் பதிவானது. 1920 இல், தம் பிறப்பையே இழிவுபடுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி- பெருங்காமநல்லூர் பிறமலைக் கள்ளர் இன மக்கள் 16 பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையான கொடூரம் போலீஸ் குறிப்புகளில் மட்டுமே பதிவானது. செத்து விழுந்தவர்களில் மாயக்காள் என்கிற பெண்ணும் ஒருவர். சுட்ட போலிஸ்களில் எவரும் வெள்ளையர் இல்லை. எல்லாம் பிற சாதித் தமிழர்களே. பெருங்காமநல்லூரியில் செத்து விழுந்தவர்களின் மார்பிலும், மாயக்காளின் பிறப்பு உறுப்பிலும் துப்பாக்கி முனை 'பைனட்' கத்தியை செருகி, பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதித்து நின்று கொக்கரிதவர்கள் பிற சாதித்தமிழர்கள். இந்த தமிழன் மீது அந்த தமிழனுக்கு அத்தனை கோபம்!
வெள்ளையனை எதிர்கொண்டு அவர்கள் விழ்ந்து மடிந்த ஏப்ரல் 3 தேதியை நாம் எப்படி மறக்கலாம். மறைக்கபட்ட தென் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கை மறக்கலாமா? 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.
உயிரை, தலையிலிருந்து உதிரும் மயிராய் கருதி ஏகாதிபத்திய துப்பாக்கி ரவைகளுக்குப் பலியான பெருங்கமாநல்லூர் தியாகிகளுக்கு அணையா விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்துவோம்.
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
No comments:
Post a Comment